2024ம் ஆண்டிற்குரிய பட்ஜெட் மூலம் அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள அரச ஊழியர்களின் சம்பளம், அரசாங்கத்தின் பிரதான வருமான மூலமான அரச வரி வருமானத்தில் இருந்துதான் வழங்க வேண்டும் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் அன்றாட செயற்பாடுகளுக்காக அரசாங்கம் மேற்கொள்ளும் நிர்வாக செலவுகளுக்கு போதுமான அளவு நிதி இல்லாமை மற்றும் இறக்குமதிகளுக்கு ஏற்ப ஏற்றுமதி வருமானம் இல்லாமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்தப் பற்றாக்குறைகள் ஏற்படுகின்றன.
இவ்வாறு பற்றாக்குறை தொடர்ந்தும் ஏற்பட்டு, நாடு வங்குரோத்து நிலைக்குச் செல்லாமல் இருப்பதற்காக கடந்த காலங்களில் பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டன.
துரதிஷ்டவசமாக அண்மைய வருடங்களில் இந்த சட்டங்களுக்கேற்ப செயற்படாமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டது.
2024 வரவு செலவுத்திட்டம் மூலம் அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள அரச ஊழியர்களின் சம்பளம், அரசாங்கத்தின் பிரதான வருமான மூலமான அரச வரி வருமானத்தில் இருந்துதான் வழங்க வேண்டும் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.
வரவு செலவுத் திட்டத்திற்குப் பிறகு, சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது தவணைக் கடன் கிடைக்கவுள்ளது. கடன் மறுசீரமைப்புப் பணிகள் நிறைவு செய்யப்பட்ட பின்னர் வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள அனைத்து விடயங்களையும் செயல்படுத்த போதுமான நிதி எமக்குக் கிடைக்கும் என எதிர்பார்த்துள்ளோம் எனவும் தெரிவித்தார்.