கையடக்கத் தொலைபேசி சிம் அட்டைகளை புதுப்பிக்கும் நடவடிக்கையின் கீழ் நாடளாவிய ரீதியில் மீள் பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தாம் பயன்படுத்தும் சிம் அட்டையினை தமது பெயரில் பதிவு செய்து கொள்வது கட்டாயம் என தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்துடன், தேசிய அடையாள அட்டை எண்ணின் கீழ் வெளியிடப்படும் முத்திரைகள் குறித்து பாவனையாளர்கள் அறிந்திருக்க வேண்டும் எனவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில், நபர் ஒருவர் தமது கையடக்கத் தொலைபேசியில் #132# எனும் இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்துவதன் மூலம், தகவல்களை சரிபார்த்துக்கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
நபர் ஒருவரின் தேசிய அடையாள அட்டை இலக்கத்தில் பிறிதொரு சிம் அட்டை பதிவு செய்யப்பட்டிருந்தால் அதனை உடனடியாக இரத்து செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அவ்வாறு செய்யாத நிலையில், குறித்த சிம் அட்டை மூலம் முறைகேடுகள் இடம்பெறும் நிலையில், அதனை உரிய நபரே பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஒருவர் பயன்படுத்தும் சிம் அட்டை தமது பெயரில் பதிவு செய்யப்படாத நிலையில், உரிய வலையமைப்பு நிறுவனத்துடன் தொடர்புகொண்டு பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.