கம்பஹாவில் வீடொன்றில் மர்மமான முறையில் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் ஒன்று நேற்று முன்தினம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கிரிதிவெல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்த பெண் ஊராபொல பிரதேசத்தைச் சேர்ந்த கே.ஏ.சஞ்சீவனி 35 வயதான ஒரு பிள்ளையின் தாய் எனவும் பொலிஸார் கூறுகின்றனர். உயிரிழந்த பெண்ணினின் கணவர் பல வருடங்களாக வெளிநாட்டில் பணியாற்றி வருகின்றார்.
குறித்த பெண்ணின் கணவனின் தாய், தந்தை மற்றும் சகோதரருடன் கணவரின் வீட்டில் வசித்து வந்தமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
வீட்டின் வரவேற்பறையின் நடுப்பகுதியில் சடலமாக கிடப்பதைக் கண்ட மாமியார், சம்பவம் தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் தாயாருக்கு தெரியப்படுத்தியதுடன், பொலிஸாருக்கும் அறிவித்துள்ளார்.
குறித்த இடத்திற்குச் சென்ற பூகொட பதில் நீதவான் கமல் சமந்தபெரும, பிரேத பரிசோதனைகளை மேற்கொண்டதுடன், சடலத்தை வட்டுப்பிட்டிவல வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று நீதிமன்றில் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
பெண்னின் உயிரிழப்புக்கான காரணம் வெளியாகாத நிலையில், உயிரிழந்த பெண்ணின் கணவரின் சகோதரன் காணாமல் போயுள்ளதாகவும், அவரை கைது செய்ய விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.