கேரளாவில் தனது 14 வயது மகளை தந்தையே விஷம் கொடுத்து கொலை செய்த பயங்கர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த 14 வயதான சிறுமியின் குடும்பம் கேரள மாநிலம் ஆலுவா அருகே உள்ள கருமாலூரில் வசித்து வந்துள்ளது. சிறுமி பாத்திமா தன்னுடன் பள்ளியில் படிக்கும் மாற்று மதத்தைச் சேர்ந்த ஒருவரை காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதற்கு அவரது தந்தை அபீஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 29-ம் தேதி காலை சிறுமி பாத்திமாவுக்கும் தந்தைக்கும் வாக்குவாதம் ஏற்பட, ‘மாற்று மதத்தைச் சேர்ந்தவரை காதலிப்பதை நிறுத்த வேண்டும்’ என அபீஸ் தனது மகளிடம் சத்தம் போட்டுள்ளார். இறுதியில் வாக்குவாதம் முற்றிய நிலையில், சிறுமியை இரும்பு கம்பி கொண்டு கடுமையாக தாக்கிய அபீஸ், அவரை வலுக்கட்டாயமாக பூச்சிக் கொல்லி மருந்தை குடிக்க வைத்துள்ளார்.
இந்தச் சம்பவத்துக்கு பின் சிறுமியை அவரின் தாயும், அருகில் உள்ளவர்களும் சேர்ந்து மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கும்போதே சிறுமியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்த நிலையில் இருந்துள்ளது. விஷம் குடித்ததால் தொடர்ந்து சிறுமியின் உடலுறுப்புகள் செயலிழந்தன. மருத்துவர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும், சிறுமியின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. 10 நாட்கள் உயிருக்குப் போராடிய அவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
இந்தச் சம்பவத்தில் வழக்கு பதிந்துள்ள கேரள காவல் துறை, சிறுமி மற்றும் சிறுமியின் தாயின் வாக்குமூலத்தின்படி அபீஸை கைது செய்துள்ளனர். 43 வயதான அபீஸ் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றிவருகிறார். அவரை கைது செய்துள்ள போலீஸார் சிறையில் அடைத்துள்ளனர். அபீஸ் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டார் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.