மதுரை நரிமேடு பகுதியிலுள்ள பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தெருவைச் சேர்ந்தவர் காளிமுத்து (38). தச்சுத் தொழிலாளி. இவரது மனைவி ஜாக்குலின் ராணி (36). இவர்களது மகள் மதுமதி (12). தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்தார். நேற்று முன்தினம் ஜாக்குலின் ராணிக்கு பிறந்தநாள். இதையொட்டி காளிமுத்து மனைவி, குழந்தையுடன் கேக்வெட்டி கொண்டாடியுள்ளனர்.
இந்நிலையில், நேற்று மதியத்துக்கு மேல் பூட்டிய வீட்டுக்குள் ஜாக்குலின், அவரது மகளும் தூக்கிட்டு தற்கொலை செய்திருப்பது தெரிந்தது. இதுபற்றி தகவல் அறிந்த செல்லூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்றனர். கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, தாய், மகள் இருவரும் ஒரே சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரிந்தது. மேலும், வீட்டுக்குள் குருணை மருந்தும் கிடந்ததால் மருந்தை குடித்துவிட்டு தூக்கிட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. போலீஸார் இருவரின் உடல்களையும் கைப்பற்றி மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வீட்டுக்குள் இருந்து கைப்பற்றிய செல்போன் ஒன்றை போலீஸார் ஆய்வு செய்தபோது, மனைவி, மகளுக்கு காளிமுத்து பிறந்தநாள் கேக் ஊட்டிய காட்சிகள் மற்றும் மதுரை கூடல்நகர் ரயில் நிலைய படத்துடன் ‘விடை பெறுகிறேன், நன்றி’ என்ற தகவலும் இடம் பெற்றிருப்பது தெரிந்தது. இதற்கிடையில் கூடல்நகர் ரயில் நிலையம் – சமய நல்லூருக்கு இடையில் ரயில் முன் பாய்ந்து காளிமுத்து உயிரிழந்த நிலையில் அவரின் உடலை ரயில்வே போலீஸார் கைப்பற்றினர். அவரது உடல் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியது: “தச்சுத் தொழிலாளியான காளிமுத்து, சமீபத்தில் கடன் வாங்கி ‘புல்லட்’ ஒன்றை வாங்கியுள்ளார். இதுதொடர்பாக குடும்பத்தில் சிறு பிரச்சினை இருந்துள்ளது. எனினும் நேற்று முன்தினம் குடும்பத்தினர் சந்தோஷமாகவே ஜாக்குலின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டியுள்ளனர். ஆனாலும், அடுத்தடுத்து கணவன், மனைவி, மகள் தற்கொலைக்கு என்ன காரணம் எனப் புரியவில்லை.
ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்த காளிமுத்து, கடைசியாக அவரது புல்லட்டை எடுத்துச் செல்லவில்லை. மனைவியின் ஸ்கூட்டியில் தான் சென்றிருக்கிறார். மனைவி, மகள் தற்கொலையை தெரிந்து, அதிர்ச்சியில் காளிமுத்து தற்கொலை செய்தாரா அல்லது தற்கொலை செய்யபோவதாக காளிமுத்து செல்போனில் அனுப்பிய தகவலால் தாய், மகள் தற்கொலை செய்தனரா என்ற கோணத்தில் விசாரிக்கிறோம்’’ என்றனர்.