அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் செவிலியராக பணிபுரிந்த மனைவியைக் கொடூரமாகக் கொன்றதற்காக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மனைவி மெரின் ஜாய் திருமணத்துக்குப் பின் தகாத உறவில் இருந்ததாகக் கருதி கொலைக்கு செய்ததாக பிலிப் மேத்யூ ஒப்புக்கொண்டிருக்கிறார். அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்ததால் மரண தண்டனைக்குப் பதிலாக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கொலை 2020ஆம் ஆண்டு நடந்துள்ளது. 26 வயாதன மெரின் ஜாய் ப்ரோவர்ட் ஹெல்த் கோரல் ஸ்பிரிங்ஸில் செவிலியராக இருந்தார். அவரை மருத்துவமனை வளாகத்தில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் வைத்து 17 முறை கத்தியால் குத்திக் கொன்றிருக்கிறார் மேத்யூ. ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த மனைவியின் உடல் மீது வாகனத்தை ஏற்றிச் சென்றிருக்கிறார்.
கொலையை நேரில் பார்த்த மருத்துவமனை ஊழியர்கள் சிலர் ஸ்பீடு பிரேக்கர் மீது ஏறிச் செல்வது போல காரை ஏற்றிச் சென்றதாக சாட்சியம் கூறியுள்ளனர். அப்போது ஜாய் கருவுற்று வயிற்றில் குழந்தை இருந்ததாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
இந்த வழக்கை விசாரித்த அமெரிக்க நீதிமன்றம் மேத்யூவுக்கு ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேத்யூ தரப்பில் மேல்முறையீடு செய்யாமல் இருப்பதாக உத்தரவாதம் அளிக்கப்பட்டதால், மரண தண்டனைக்குப் பதிலாக ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
என் மகளைக் கொன்றவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டு, சட்டப்பூர்வ நடைமுறைகள் முடிந்துவிட்டதை நிம்மதி அளிப்பதாக ஜாய்யின் தாயார் கூறியுள்ளார்.