தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே குடும்ப பிரச்சினை காரணமாக சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்டு இளைஞர் தற்கொலை செய்து கொண்டார். .
சாத்தான்குளம் அருகே சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த பரமசிவன் மகன் செந்தில் வேல்(35). இவர் அங்கு கோழிப்பண்ணை நடத்தியதுடன் கார் ஓட்டுநராகவும் பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் செந்தில் வேல், சாத்தான் குளம் பகுதியில் காட்டுப் பகுதியில் அமர்ந்தவாறு குடும்ப பிரச்சினை காரணமாக தான் விஷம் குடித்து தற்கொலை செய்யப் போவதாக வாட்ஸ் – அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்டு இருந்தார்.
இது போல் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் முத்துவுக்கும் வீடியோ அனுப்பி இருந்தார். இதையடுத்து செந்தில்வேலின் தற்கொலை முயற்சியை தடுக்கும் வகையில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வீடியோவை அனுப்பி போலீஸார் உஷார் படுத்தப்பட்டனர். வீடியோவில் காணப்படும் இடம் சாத்தான்குளம் கரையடிகுளம் என தெரிய வந்ததையடுத்து போலீஸார் மற்றும் செந்தில் வேலின் உறவினர்கள் நேற்று காலை அங்கு சென்றனர்
அங்கு செந்தில்வேல் உயிரிழந்த நிலையில் கிடந்தார். அவரது சடலத்தை போலீஸார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து நடந்த விசாரணையில், செந்தில் வேல் நேற்று முன்தினம் குடும்பத்தில் அனைவருக்கும் திருமணமாகி விட்டது.
இதனால் விரக்தியில் வீட்டை விட்டு வெளியே சென்றவர் நீண்ட நேரமாகியும் திரும்பி வராத நிலையில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் முத்து விசாரித்து வருகிறார்.