ராசிபுரம் அருகே நேரிட்ட சாலை விபத்தில், கொல்லிமலையைச் சேர்ந்த வனவர் உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் மஞ்சளாமூடு பகுதியைச் சேர்ந்தவர் மர வியாபாரி ராஜன் (40). இவரும், கொல்லிமலை அரியூர்நாடு ஊராட்சி ஊர்கலிங்கம் கிராமத்தைச் சேர்ந்த மர வியாபாரி செல்வகுமார் (38) என்பவரும், கொல்லிமலையில் மரம் வெட்ட வனத் துறையினரிடம் அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தனர்.
இதையடுத்து, கொல்லிமலை வனவர் ரகுநாதன் (43) மற்றும் வியாபாரிகள் ராஜன், செல்வகுமார் ஆகியோர் நேற்று முன்தினம் இரவுகாரில் சேலம் வனத் துறை அலுவலகத்துக்கு வந்து கொண்டிருந்தனர். ராஜன் காரை ஓட்டினார்.
ராசிபுரம் அருகே மோர்பாளையம் பகுதியில் வந்தபோது, திடீரென சாலையோரம் இருந்த நிழற்கூடத்தின் மீது கார் மோதி, சாலையில் கவிழ்ந்தது. இதில், வனவர் ரகுநாதன் உள்ளிட்ட 3 பேரும் பலத்த காயமடைந்து, அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து பேளுக்குறிச்சி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.