ராஜஸ்தான் மாநிலத்தில் இரண்டு குடும்பங்களுக்கு இடையிலான நிலத் தகராறில் தனது உறவினர் ஒருவரை சாகும் வரை டிராக்டர் ஏற்றி கொலை செய்த கொடூரம் நிகழ்ந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
பரத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பகதூர் சிங் மற்றும் அதர் சிங் குடும்பத்தினர். இந்த இரண்டு குடும்பத்தினருக்கும் இடையில் நீண்ட நாட்களாக நிலத் தகராறு இருந்து வந்துள்ளது. இந்தநிலையில், சர்ச்சைக்குரிய நிலத்துக்கு பகதூர் சிங் குடும்பத்தினர் இன்று காலை டிராக்டரில் வந்துள்ளனர். கொஞ்சம் தாமதமாக அதர் சிங் குடும்பத்தினரும் வந்துள்ளனர். பின்னர், இந்த இரு குடும்பத்தினருக்கும் இடையே மோதல் உண்டாகி ஒருவரை ஒருவர் கம்பு, கற்கலைக் கொண்டு தாக்கியுள்ளனர்.
இந்த மோதலில் அதர் சிங்கின் மகன் நிர்பத் கீழே விழுந்துள்ளார். அப்போது அவர் மீது எதிர் தரப்பைச் சேர்ந்த அவரது உறவினரான தாமோதர் டிராக்டரை ஏற்றியுள்ளார். அருகில் இருந்தவர்கள் எவ்வளவு தடுத்தும் கேட்காமல் நிர்பத் சாகும் வரை 8 முறை அவர் மீது முன்னும் பின்னும் டிராக்டர் ஏற்றிக் கொலை செய்துள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.