மதுரையில் காதல் விவகாரத்தில் காதலியின் தந்தை என கருதி ஆளை மாற்றி முதியவரை கொன்ற சம்பவத்தில் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
மதுரை கரிமேட்டிலுள்ள யோகனந்தசுவாமி தெற்கு மடம், நல்லமாயன் காம்பவுண்டு பகுதியைச் சேர்ந்தவர் பொங்குடி (65). இவர் தனது வீட்டில் டிவி பார்த்துக்கொண்டிருந்தபோது, வீட்டுக்குள் புகுந்த இரண்டுபேர் அவரது மனைவி பாண்டியம்மாள் கண்முன் பொங்குடியை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பினர்.
இது தொடர்பாக கரிமேடு போலீஸார் நடத்திய விசாரணையில், காதல் விவகாரத்தில் மதுரை காளவாசல் எச்எம்எஸ் காலனியைச் சேர்ந்த பழனிச்சாமி மகன் முத்தமிழன் என்பவர் காதலியின் தந்தையை கொல்ல வந்தபோது, ஆள் மாற்றி பொங்குடியை கொலை செய்திருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக முத்தமிழன் (19), அவரது நண்பர் கோச்சடை சரவணப் பாண்டி மகன் அருணாச்சலம் (19) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.